Datasets:
Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
தமிழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தங்க, வெள்ளி நாணயங்கள் வழங்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 17:48:00 |
சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்களில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க, இன்று (பிப். 26) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஒரு ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த 24 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநர் உடன் கூடிய நடத்துநர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாரட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 6 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான நடத்துநர் பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இவ்விழாவில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி ஏ.வி.ராஜுவுக்கு எதிராக அதிமுக வழக்கு @ உயர் நீதிமன்றம் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-26 17:02:00 |
சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு எதிராக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கோரி, சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, கூவத்தூர் சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். மேலும், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று நான் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார்.
எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் என் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.
பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என எங்களது பொதுச்செயலாளர் ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், அதிமுகவில் இத்தனை ஆண்டு காலமாக இருந்த ஏ.வி. ராஜு இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், அதிமுகவுக்கு என்று பிரத்யேகமான பெண்கள் ஆதரவு இருந்தது. ராஜுவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளது. ராஜுவின் இந்த பேச்சால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், ராஜுவின் பேச்சை நீக்க வேண்டும் என கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகள் நியமனம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 16:52:00 |
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இரண்டு துணைத் தலைவர்கள் மற்றும் மூன்று பொதுச் செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் கே.செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ண சேதுராமன் ஆகியோரும், கட்சியின் பொதுச் செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தய்யா ஆகியோரை நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் அழைப்பை ஏற்று தானும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமாரும் உடனடியாக தலைநகர் டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, கருணாநிதி நினைவகத் திறப்பு விழாவில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கெடுத்துக் கொள்வார்கள். நினைவக திறப்பு விழா மிக மிக சிறப்பாக அமைந்திட தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.
|
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள்... 10 ஆண்டாக அதிகாரிகளுக்கு ஆழ்ந்த தூக்கமா? - ஐகோர்ட் | கி.மகாராஜன் | மதுரை | 2024-02-26 16:45:00 |
மதுரை: “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனு: ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி கட்டப்படும் கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோயில் சுவரில் இருந்து கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயர வரம்பாக 9 மீட்டர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மீறி மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு மேல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயரமான கட்டிடங்களால் பக்தர்களால் கோயில் கோபுரங்களை தரிசிக்க முடியவில்லை. எனவே, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் ஆணையர்களை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது.
வழக்கறிஞர் ஆணையர்கள் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் மொத்தம் 547 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 525 கட்டிடங்கள் 9 மீட்டருக்கும் மேல் உயரமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், “அரசின் உயரக் கட்டுப்பாடு அரசாணையை மீறி மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார்.
மதுரை மாநகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடந்து வருகிறது. விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தால் பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
9 மீட்டருக்கு மேல் உள்ள கட்டிடம், அனுமதியற்ற கட்டுமானம், விதிமீறல் கட்டிடங்கள் குறித்து மாநகராட்சி ஆவணங்களில் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. தற்போது வரை 9 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, ''மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிபெறாமல் விதிமீறல் கட்டிடங்களை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்களா? விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பணியாகும். ஆனால், நோட்டீஸை அனுப்பிவிட்டு மேல் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் உள்ளனர்.
இந்த வழக்கில் உள்ளூர் திட்டக்குழுமத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு 1997-க்கு முன்பு மதுரை மாநகராட்சி நிர்வாகம் எத்தனை அனுமதி வழங்கியது? 1997-க்கு பிறகு உள்ளூர் திட்ட குழுமம் எத்தனை அனுமதி வழங்கியது? விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஏப்ரல் 4-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டது.
|
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: 150+ விவசாயிகள் கைது - போலீஸ் நடவடிக்கையால் பரபரப்பு | இரா.ஜெயப்பிரகாஷ் | காஞ்சிபுரம் | 2024-02-26 16:30:00 |
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நிலம் எடுப்புக்கான மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காரை அருகே உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்துக்கு பேரணியாக வந்து முற்றுகையிட முடிவு செய்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து டிராக்டரில் ஊர்வலமாக செல்ல கிராம மக்கள் திங்கள்கிழமை ஏகனாபுரம் அருகே கூடினர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்ய முயன்றனர்.
போராட்டத்தை தொடங்கும் முன்பே எதற்காக வந்து கைது செய்கிறீர்கள்? என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வலுக்கட்டயமாக தரதரவென விசாயிகள், மற்றும் பெண்களை இழுத்துச் சென்று போலீஸார் கைது செய்னர். இதனால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார் சுங்குவார்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். அங்கு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பரபப்பாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உள்பட அருகாமையில் உள்ள 4 மாவட்ட போலீஸாரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
|
பாஜகவில் மேலும் சில தலைவர்கள் இணைவதாக வானதி சீனிவாசன் தகவல் | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-26 16:23:00 |
கோவை: “பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடுதான் பிற கட்சியினர் இணைகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பண பேரம் என கூறுகின்றனர்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ‘இன்று மாலை 5 மணிக்கு பாஜகவில் முக்கியத் தலைவர்கள் இணைவதாக கூறப்படுகிறதே’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “பாஜகவின் இணையும் அத்தனை பேரும் பாஜகவின் கொள்கைகளைப் பிடித்து வருகின்றனர். அதோடு, எங்களுடைய கட்சி புதிதாக வருபவர்களுக்கு கூட அதிகமான வாய்ப்புகளை வழங்குகின்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இந்தக் கட்சி நாட்டினுடைய வளர்ச்சிக்காக பாடுபடுகிறது என்கின்ற உன்னதமான உணர்வோடு வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பண பேரம் என்று சொல்கின்றனர். மற்ற கட்சியினரை இழுக்குறோம் என்றால் அவர்கள் விருப்பம் இல்லை என்றால் வர முடியாது. பாஜகவில் இணைந்தால் அரசியல் லட்சியங்களை நிறைவேற முடியும் என்பதால் இணைகின்றனர்.
பாஜகவில் யார் இணைகின்றார், அவர் எத்தனை அடி உயரத்தில் இருப்பார், அவர் எந்த நேரத்தில் வேட்டி கட்டுவார், புடவை கட்டுவார் என்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? இன்னும் கொஞ்ச நேரம்தான். பொறுங்க. இன்னும் 4 மணி நேரத்தில் தெரிந்து விடும். ஊடகங்கள் இல்லாமல் யாரையும் இணைக்க மாட்டோம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த விஜயதரணிக்கு உழைப்பு, திறமை அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும். கட்சித் தலைமை அவருக்கு என்ன பதவி வழங்கலாம் என்பதை முடிவு செய்யும்” என்றார் வானதி சீனிவாசன்.
|
உதகை அருகே எருமை மீது மோதி தடம் புரண்ட மலை ரயில் - பயணிகளுக்கு பாதிப்பு இல்லை | ஆர்.டி.சிவசங்கர் | உதகை | 2024-02-26 16:06:00 |
உதகை: உதகை அருகே எருமை மீது மோதியதால் மலை ரயில் தரம் புரண்டது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளொன்றுக்கு அதிகபட்சமாக 220 பயணிகள் மட்டுமே இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு உதகைக்கு நீலகிரி மலை ரயில் புறப்பட்டது. காலை 10 மணிக்கு குன்னூரை வந்தடைந்தது. அங்கிருந்து 2 முதல் வகுப்பு பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பொது பெட்டி என 5 பெட்டிகளில் 220 பயணிகளுடன் உதகை நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில், காலை 11.50 மணியளவில் உதகை நோக்கி மலை ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது உதகை அருகே பெர்ன்ஹில்லை தாண்டி 45-வது கி.மீட்டரில் திடீரென ரயிலின் குறுக்கே வளர்ப்பு எருமைகள் தண்டவாளத்தை கடந்துள்ளன.
இதைக் கண்ட பிரேக்ஸ்மேன் திடீரென பிரேக்கை பிடிக்க, அப்போது ஏற்பட்ட உராய்வில் மலை ரயில் எருமை மீது மோதி, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ரயிலில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ரயில் மோதியதில் எருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அதிர்ச்சியில் இருந்த பயணிகளை ரயில்வே ஊழியர்கள் ரயிலிலிருந்து கீழே இறக்கி ரயில் நிலையம் அழைத்து சென்றனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீஸார் தடம் புரண்ட ரயிலை ஆய்வு செய்தனர். விபத்து காரணமாக உதகையிலிருந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் கிரேனை கொண்டு தடம் புரண்ட ரயில் பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்புறம் இஞ்சின்: நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு மலையேறி வரும் போது முன்னின்று பெட்டிகளை இழுத்து செல்வதில்லை. மாறாக பின்னிலிருந்து பெட்டிகளை முன்னோடி தள்ளிக்கொண்டு செல்லும். மிதமான 20 கி.மீ., வேகத்தில் இயங்கும் மலை ரயில் விபத்து ஏற்பட்ட போது பெட்டிகள் முன்னோக்கி வந்தன. பெட்டியில் இருந்த பிரேக்ஸ்மேன் முதலில் பிரேக் அழுத்தியுள்ளார்.
இஞ்சினில் உள்ள ஓட்டுநர் இதை உணர்வதற்குள் பெட்டி தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது. நூற்றாண்டு பழமையான நீலகிரி மலை ரயில் தடம் புரண்டது இது இரண்டாம் முறையாகும். கடந்தாண்டு ஜூன் மாதம் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில் குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சில மீட்டர் தூரம் சென்றதும் ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது.
|
அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி மனு: இபிஎஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-26 15:35:00 |
சென்னை: தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் உதயநிதி செப்டம்பர் 7-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து நான் தேடிக்கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார்.
அவரது அறிக்கை தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உள்ளன. எனவே, தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “எதன் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் ஈ.வி.சந்துரு, “இந்த விவகாரத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முகாந்திரமே இல்லை. பொது வாழ்வில் இருக்கும் நபர் ஒருவர் குறித்து பொதுவாழ்வில் இருக்கும் மற்றொரு நபர் பேசியதில் தவறில்லை. பொது வெளியில் நடந்ததை பற்றியே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தனிப்பட்ட விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை” என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உதயநிதி ஸ்டாலினின் மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்டு இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
|
பழனிசாமியை சந்தித்தது ஏன்? - தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 15:31:00 |
சென்னை: காமராஜர், மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்பதால் தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்துடன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்ததாக தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமாகா அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம். அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜகவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
|
பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி: அடிக்கல் நாட்டிய ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவிப்பு | செய்திப்பிரிவு | குப்பம் | 2024-02-26 15:28:00 |
குப்பம்: பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அடிக்கல் நாட்டு நிகழ்வில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில்தான் புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்.
இதற்கிடையே, பாலாற்று பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகப் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறும்போது, ‘‘1992 பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு மீண்டும் மீறியுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளது.
இதுதவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் இந்த வழக்குகள் முடிந்துவிட்டதாகப் பொய்யான ஒரு தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். இனியும் தமிழக அரசு தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதற்கான ஆதாரங்களைத் திரட்டி புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் பாலாறு என்று ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும் நிலை எதிர்காலத்தில் வரும்’’ என்றார்.
இதனிடையே, பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: பாலாற்றில் புதிய தடுப்பணை | ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்
அதேபோல், “தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும். அதன்மூலம் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
|
காஞ்சி, திருவள்ளூர் பிரதிநிதிகளிடம் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 14:40:00 |
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டு வரும் நிலையில், இன்று (பிப்.26) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில், காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர்கள், விவசாய சங்கத்தினர், வழக்கறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை திமுக எம்.பி.கனிமொழி கேட்டறிந்தார்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்பி உடன் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோவி செழியன், ஆவடி நாசர், சி.வி.எம்.பி.எழிலரசன் எழிலன் நாகநாதன், கோவிந்தராஜன்,சுந்தர், சந்திரன் சென்னை மாநகர மேயர் பிரியாராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
|
“தமிழிசை, நிர்மலா சீதாராமனை புதுச்சேரி வாக்காளர்கள் ஏற்க மாட்டார்கள்” - நாராயணசாமி கருத்து | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2024-02-26 14:36:00 |
புதுச்சேரி: “புதுச்சேரி மக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமனுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும். காரைக்காலில் சிறப்பு நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் ஜிப்மர் திறந்தால் மட்டும் போதாது; தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். ஜிப்மருக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் மேரி கட்டிடம், கடற்கரையில் பல் நோக்கு அரங்கம், காமராஜர் மணிமண்டபம் முழுமையாக பயன்படுத்தவில்லை. மேரி கட்டிடம் பிரதமரால் திறக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடற்கரை பல்நோக்கு அரங்கம் 2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையை மாற்ற வேண்டிய அவசியமில்லை. காமராஜர் மணி மண்டபம் அரசு விழாக்கள் நடத்த மட்டுமே பயன்படுத்துகிறது. நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.
புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டும் விவகாரத்தில் ஆளுநர் தமிழிசை - பேரவைத் தலைவர் செல்வம் இடையே பனிப் போர் நடக்கிறது. பேரவைத் தலைவர் எந்த உள்நோக்கத்தோடு ரூ.620 கோடியில் சட்டப்பேரவை கட்ட நினைக்கிறார் என கேள்வி எழுகிறது. இதற்கு முதல்வர், அமைச்சர்கள் உடந்தையாக உள்ளனர். ஆளுநரிடம் உள்ள கோப்பு பரிமாற்றம் பற்றி பேரவைத் தலைவர் வெளியே பேசுவதே தவறு. இந்த ஆட்சியில் ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர், அமைச்சர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இவர்களால் சட்டமன்றம் கட்ட முடியாது. இதற்கு மத்திய அரசு நிதி கொடுக்காது.
இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதுச்சேரி காங்கிரஸுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்து வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு தொகுதியை தாரை வார்த்துள்ளது. 3 நியமன எம்எல்ஏ, மாநிலங்களவை பதவியை பாஜக பறித்துக்கொண்டது. ரங்கசாமி தன் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள, ஆட்சியின் ஊழல்களை மத்திய பாஜக ஆட்சி கண்டுகொள்ளாமல் இருக்க பதவிகளை பாஜகவுக்கு கொடுத்து வருகிறார்.
பாஜகவோ வேட்பாளர்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். வேட்பாளரே இல்லாமல் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் நிற்க பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் இதை பார்த்து வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்.
விஜயதரணி கட்சி மாறியது பற்றி கேட்கிறீர்கள். அரசியல் கட்சியிலிருந்து செல்வது சகஜம். எனினும், தமிழக அரசியலில் தலையிட மாட்டேன். தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரி அரசு ஊழல் பட்டியல் தொடர்பாக புகார் தருவேன். காங்கிரஸில் ஒரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும். நாங்கள் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
புதுச்சேரி மக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமனுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்” என்றார்.
அப்படியென்றால் ராகுல் காந்தி, புதுச்சேரி தொகுதியில் போட்டியிட முன்வந்தால் எதிர்ப்பீர்களா என கேட்டபோது, “அவர் அகில இந்திய தலைவர், எங்கள் கட்சியின் தலைவர். அவர் போட்டியிடுவதை நாங்கள் எதிர்க்க முடியுமா?” என்று நாராயணசாமி பதில் அளித்தார்.
|
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழக காங்கிரஸில் பொறுப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 14:27:00 |
சென்னை: பொருளாதார நிபுணராக அறியப்படும் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமை, நிதி மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்த சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பிரபலமானார்.
சமீப காலமாகவே மத்திய அரசின் பொருளாதாரம் குறித்து புள்ளி விவரங்களை கொண்டு மத்திய பாஜக அரசை விமர்சித்து வந்தார். இது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
|
“ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது” - செல்வப்பெருந்தகை சாடல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 13:36:00 |
சென்னை: "தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரஸில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜக கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பாஜகவுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பாஜகவுடன் தமாகா கூட்டு சேர்ந்திருக்கிறது.
மறைந்த ஜி.கே. மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் 1996ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் தலைநகர் டெல்லிக்கு தமாகாவில் வெற்றி பெற்ற 20 மக்களவை உறுப்பினர்களை தம்முடன் அழைத்துச் சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றார்.
ஏப்ரல் 1999ல் அன்று பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அன்று தமிழ் மாநில காங்கிரஸில் ப. சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மறைந்த ஜி.கே. மூப்பனாரை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று வகுப்புவாத பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே. வாசன் வகுப்புவாத பாஜகவில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் இயக்கத்தில் மூப்பனார் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கேபினட் அந்தஸ்துள்ள கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பதவிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வழங்கியிருக்கிறார். இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த முடிவின் காரணமாக மூப்பனாரின் ஆத்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
|
பாலாற்றில் புதிய தடுப்பணை | உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வைகோ வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 12:47:00 |
சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திர அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடையானை பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து தமிழகத்தில் வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் நுழைகிறது.
தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநில அரசு குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் என்ற பகுதியில் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது தொடர்பாக அம்மாநில வனத்துறை அமைச்சர், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ரெட்டிகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு தடுப்பணைக்கான பணிகளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892 ஆம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. அது மட்டுமின்றி, குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். இந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் எனும் இடத்தில் அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது.
எனவே கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது. மீறினால் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானதாக கருதப்படும். இதற்கான பணிகளை ஆய்வு செய்த ஆந்திர சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும், தேர்தலுக்குப்பின் மேலும் 2 தடுப்பணைகள் பாலாற்றில் கட்டப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டுவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழகத்தின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்படுவதுடன், வேளாண் தொழிலும் முற்றாக சீரழிந்து விடும்.
எனவே தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
சிவகங்கை மாவட்ட அதிமுகவில் வெடித்த கோஷ்டி பூசல்! | இ.ஜெகநாதன் | சிவகங்கை | 2024-02-26 12:46:00 |
சிவகங்கை: மக்களவைத் தேர்தல் சமயத்தில் சிவகங்கை மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானவர் ஜி.பாஸ்கரன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என ஜி.பாஸ்கரன் எதிர்பார்த்த நிலையில், மாவட்டச் செயலாளர் செந்தில் நாதனுக்கு ஒதுக்கப்பட்டது. அத்தேர்தலில் செந்தில் நாதன் வெற்றி பெற்றார். அதன் பின்னர், ஜி.பாஸ்கரனை கட்சி நிகழ்ச்சிகளில் செந்தில்நாதன் தரப்பு புறக்கணித்து வந்தது.
இதனால் அதிருப்தியில் இருந்த ஜி.பாஸ்கரன், சிவகங்கை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி தர வேண்டுமென பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதற்கு செந்தில் நாதன் தரப்பு முட்டுக்கட்டை போட்டது. சில மாதங்களுக்கு முன்பு, ஜி.பாஸ்கரனுக்கு மாநில அமைப் புச் செயலாளர் பதவி கிடைத்தது. அதன் பின்னர், அவருக்கு செந்தில் நாதன் தரப்பினர் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் அவர்களுக்கு இடையே கோஷ்டி பூசல் தலை தூக்கத் தொடங்கி உள்ளது. பிப்.10-ம் தேதி சிவகங்கையில் நடந்த மாவட்ட ‘ஜெ’ பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் செந்தில்நாதன் ஆதர வாளர் வைத்திருந்த பேனரில் ஜி.பாஸ்கரனின் புகைப்படம் இடம் பெறவில்லை. மேலும் அவரை முறையாக அழைக்காததால் அவரும், அவரது மகனும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான கருணாகரனும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, ஜி.பாஸ்கரனின் ஆதரவாளரும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாள ருமான பாலமுருகன், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வாழ்த்துத் தெரிவித்து சிவகங்கை நகரில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். அதில் ஜி.பாஸ்கரன், கருணாகரன் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்ற நிலையில், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் புகைப்படம் இடம் பெறவில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், கோஷ்டிப் பூசல்வெடித்ததால் தொண்டர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில் ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பல அணிகளாகப் பிரிந்து விட்டன. மக்களவைத் தேர்தல் சமயத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இரு கோஷ்டிகளாகச் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா இருக்கும் வரை கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லாமல் இருந்தது. அதிமுக தலைமை உடனடியாகத் தலையிட்டு கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று கூறினர்.
|
மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு | செய்திப்பிரிவு | திருவண்ணாமலை | 2024-02-26 11:35:00 |
திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்குப் பல்வேறு விவசாயச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு 3,200 ஏக்கர் விளை நிலங்களைக் கையகப்படுத்தத் தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 7 மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அனைவரையும் தமிழக அரசு விடுவித்தது. மேலும் சட்டப்பேரவையில் நிலமற்றவர்கள் போராடுகிறார்கள் என்ற பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மேல்மா கூட்டுச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைக் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு கழகம், ஏர்முனை, இந்திய விவசாயிகள் சங்கம், காவிரி வைகை குண்டாறு நீர்ப்பாசன விவசாயச் சங்கம், ஐக்கிய விவசாயச் சங்கம், கரும்பு விவசாயிகள் அணி, தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து களைத் தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் பேசும் போது, “மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும், விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
|
“திமுகவுக்கு நெருக்கமான ஜாபர் சாதிக் பின்னணியை விசாரிப்பீர்” - இபிஎஸ் @ போதைப்பொருள் விவகாரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 11:33:00 |
சென்னை: நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வரின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக காவல் துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக ஜாபர் சாதிக் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல் துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நான் எத்தனையோ முறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டப்போவையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இந்த திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறிவருதையும் ஆக்கபூர்வமான பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக சுட்டிக்காட்டி வருகிறேன்.
தமிழகம் முழுவதும் மூலை, முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப் பொருட்கள்! தட்டுப்பாடின்றி கிடைப்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை ஊடகங்களும், நாளிதழ்களும் தினமும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
2021-ம் ஆண்டு 20.45 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 6,853 வழக்குகள் பதியப்பட்டதாகவும், 9,571 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் திமுக அரசின் உள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது மற்றும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்று 2021-2022ம் ஆண்டு உள்துறை மானியக் கோரிக்கையில் நான் சட்டமன்றத்தில் பேசினேன்.
இந்நிலையில் முன்னாள் காவல்துறை தலைவர் 'ஆபரேஷன் கஞ்சா 0.1, 0.2, 0.3, 0.4' என்று போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறிய நிலையில், திமுக அரசு பொறுப்பேற்று 32 மாத கால ஆட்சிக்குப் பிறகும். இதுபோன்ற போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதையும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொம்மை முதல்வரின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறை தோல்வி அடைந்ததையே இது காட்டுகிறது.
இதற்கு காரணம், இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதாக அவ்வப்போது வரும் நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகளில் இருந்தே தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் திமுக-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளதாக, ஊடகங்கள் முக்கியச் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
திமுக-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்றும், இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத் துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வரும் நிலையில், திமுக-வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி' இயக்கத்தில் இம்மாதம் வெளியான 'மங்கை Travel of Women' என்ற படத்தைத் தயாரித்தவர் இந்த ஜாபர் சாதிக் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், திமுக-வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளதும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்தத் தலைமை நிர்வாகி, திமுக தலைமை குடும்பத்துடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழக காவல் துறையின் உயர் அதிகாரிகளிடம், தான் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வரின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்த நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து: வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-26 11:12:00 |
சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு: இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்குள் எம்.பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.
வழக்கு மாற்று நடவடிக்கை முடிந்த பிறகு மார்ச் 28-ம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம்.பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்காண பிணையை செலுத்த வேண்டும். தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராகபதவி வகித்தபோது, வீட்டுவசதிவாரிய வீடு ஒன்றை மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த பிப்.13-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில்இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பளிக்கவுள்ளார்.
இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார். இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
|
பாலாற்றில் புதிய தடுப்பணை | ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 10:46:00 |
சென்னை: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான். பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பதுதான். பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆந்திர மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும் போது, குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவிருப்பதாகவும், தேர்தல் முடிவடைந்த பிறகு மேலும் இரு தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார். பாலாற்றின் குறுக்கே கடந்த காலங்களில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் பாலாறு வறண்டு கிடக்கும் நிலையில், பாலாற்றில் புதிய அணை கட்டுவதென்பது பாலாற்றை பாசன ஆதாரமாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திரம் கட்ட முயல்வது தொடர்பான சர்ச்சை 18 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். குப்பம் பகுதியில் கணேசபுரம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சிகளில் குப்பம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் இருந்த சந்திரபாபு நாயுடு 2006 இல் முயன்ற போது, அதைக் கண்டித்து முதல் குரலை எழுப்பியதும், போராட்டங்களை நடத்தியதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். அப்போதைய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆந்திர எல்லைக்கே சென்று தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் வரை சென்று பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது.
அதன்பிறகு பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக் கூடாது.
பாலாற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்ட ஆந்திர அரசு, அம்மாநிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் 22 தடுப்பணைகளில் பெரும்பாலானவற்றின் உயரங்களை அதிகரித்து விட்டது. அதனால், ஆந்திரத்தில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் தவிர தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வருவதில்லை. அதனால், ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும். பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.
குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
|
மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 10:40:00 |
சென்னை: "பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்" என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், "நேற்று மாலை பாஜகவின் தமிழகத்தின் பொறுப்பாளர் அர்விந்த் மேனன், தமாகா அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் தமிழக அரசியல் சூழல், மக்களவை தேர்தல் குறித்து பேசினோம். அப்போது, நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். நேற்று காலை பாஜக மேலிட தலைவர்களும் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளது. பிரதமர் மோடி அவர்களை, பிரதமராக வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிப்பதாக தமாகா முடிவெடுத்துள்ளது.
மூப்பனார் காலத்தில் தொடங்கப்பட்டதில் இருந்து பிராந்திய கட்சியான தமாகா தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமாகாவின் கருத்துக்களை முறையாக கேட்டு, தமிழகத்தின் நலனுக்காக எந்த இயக்கம் மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இன்றைய சூழலில், தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு இதை விரும்பம் மத்திய அரசு உள்ளது. அதற்கு பிரதமரை கோடிட்டு காண்பித்து பல உதாரணங்கள் சொல்ல முடியும். மேலும், இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலித்து கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இரண்டு முறை பல மாநில மக்களின் ஆதரவை பெற்று வென்ற கட்சி பாஜக. தமிழக வாக்காளர்கள் அதனை கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் மூன்றாவது முறை பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும். ஏழை எளிய மக்களின் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
படித்தவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறை பாஜகவின் வெற்றி என்பது உலகளவிலேயே இந்தியாவை 3வது பொருளாதார நாடாக மாற்ற கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்தும். தமிழக மக்கள் இதனை நன்கு உணரத் தொடங்கியிருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தமாகா மக்களைச் சந்திக்கும்.
கரோனாவுக்கு பிறகு ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வோர் நிலையில் உள்ளன. ஆனால் மத்தியிலும் ஆளும் ஆட்சியாளர்களால் இந்த காலகட்டத்தில் இந்தியாவை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மாறியது. இந்த நாடு விவசாய நாடு. விவசாயத்துக்கு முக்கியதத்துவம் கொடுக்கும் கட்சியாக மத்திய பாஜக செயல்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு தற்போது மக்கள் விரோத அரசாக செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்தியாவிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுகிற அரசு என்றால் அது திமுகதான். மழை, வெள்ளத்தின் போது மெத்தனமாக செயல்பட்டது. தமிழக அரசின் செயல்பாடு மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறோம். வரும் நாட்களில் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம். நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சிகள் தமிழகத்தில் இருந்து இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
சில நாட்களில் பாஜக கூட்டணி முழுமை பெறும். மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அதன்பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்" என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
|
மார்ச் 2-வது வாரத்தில் அதிமுக கூட்டணி அறிவிப்பு | செய்திப்பிரிவு | கூறியதாவது | 2024-02-26 10:02:00 |
மார்ச் 2-வது வாரத்தில் அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி ராயபுரத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். எனக்கு தெரிந்தவரை எப்போதும் மார்ச் 2-வது வாரத்தில் தான் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கூட்டணி குறித்து நான் எதுவும் கூறமுடியாது. அதிமுகவுக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இருந்ததில்லை. கூட்டணி என்பது கூடுதல் பலம் அவ்வளவுதான்.
இன்னும் 2 வாரங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும். நல்ல கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். ஓபிஎஸ், தினகரன், அண்ணாமலை, திமுகவினர் தேர்தலுக்காக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இது தேர்தலில் எடுபடப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
|
பாஜகவில் இணைவதாக வதந்தி: பழைய பதிவை பகிர்ந்து மாஃபா பாண்டியராஜன் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 09:55:00 |
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன்! உண்மையுடன்!" என்று பதிவிட்டு தனது பழைய பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
3 வருடங்களுக்கு முன் பதிந்த அந்த பழைய பதிவில், "என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்" என்பதை தெளிவு படுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் பிரதிநிதிகள் கட்சிகள் மாறிவருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் சேர்ந்தார். தொடர்ந்து சில அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தன் மீதான வதந்தி குறித்து மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன் ! https://t.co/JO12cZ80qN
|
“தமிழக மக்களின் நலனுக்காகவே லேகியம் விற்கிறேன்” - அண்ணாமலை விளக்கம் | செய்திப்பிரிவு | பேசியதாவது | 2024-02-26 09:48:00 |
திண்டிவனம் அருகே கூட்டேரிபட்டு நான்குமுனை சந்திப்பில் நேற்று 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 226 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக மக்களையும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாடு முழுமைக்கும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறுவது உறுதி.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த 511 வாக்குறுதிகளில் ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளில் 38 சதவீதத்தினருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 10,600 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, தமிழகத்தில் உள்ள 5,400 டாஸ்மாக் கடைகளும், சாராய ஆலைகளும் மூடப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும். தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு தலா 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டு அனைவருக்கும் சர்வதேச தரத்திலான கல்வி இலவசமாக வழங்கப்படும்.
அரசு வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்னை லேகியம் விற்பவர் எனவும், பூச்சாண்டி எனவும் விமர்சிக்கின்றனர். தமிழக மக்களின் நலனுக்கான லேகியத்தை விற்று வருகின்றேன் என்றார்.
இதேபோன்று,செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கூட்டுச் சாலையில் நடைபயணம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் 6,000 ரூபாயோடு, மாநில அரசு சார்பில் ரூ.9,000 சேர்த்து ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
|
மோடி பொதுக் கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு: வானதி சீனிவாசன் தகவல் | செய்திப்பிரிவு | கூறியதாவது | 2024-02-26 09:28:00 |
பல்லடத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட நெசப்பாக்கம் பகுதியில் மக்கள் மருந்தகத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.நேற்று திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கு அதிகமான இடங்கள் மக்கள் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை முதல் முறையாக வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் கூறியிருக்கிறார்.
மாநகரத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகிறது. இந்த நிலையை வரும் மக்களவை தேர்தலில் மாற்ற வேண்டும். பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அப்போது பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணியில் இன்னும் அதிகமானோர் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
|
திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | கிருஷ்ணகிரி | 2024-02-26 09:23:00 |
கிருஷ்ணகிரி: திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சேகர், மாநிலச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் அகில இந்திய உறுப்பினர் துரை சாமி, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்த சாமி, நகரத் தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, தொகுதிப் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ‘திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் சிறப்பாகச் செய்த எம்பி செல்லகுமாருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியின பிரிவு ஒருங் கிணைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் ஹரி, மூத்த வழக்கறிஞர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|
பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் பூந்தமல்லி அருகே திடீர் சாலை மறியல் | செய்திப்பிரிவு | பூந்தமல்லி | 2024-02-26 06:15:00 |
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் நேற்று பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூந்தமல்லி டிரங்க் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, தகவலறிந்த பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
|
பல்லாவரத்தில் வன்னியர் குல சத்திரியர்கள் ஆன்மிக மாநாடு | செய்திப்பிரிவு | பல்லாவரம் | 2024-02-26 06:07:00 |
பல்லாவரம்: பல்லாவரத்தில் வன்னிய குல சத்திரியர்களின் முதல் ஆன்மிக மாநாடு நேற்று நடைபெற்றது. வன்னியர் குல சத்திரியர்களின் முதல் ஆன்மிக மாநாட்டில் முதல் நிகழ்வாக உலக மக்கள் நலம் பெற வேண்டி ஸ்ரீ சம்பு மகரிஷி சிறப்பு வேள்வி நடைபெற்றது. பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி ஆன்மிக மாநாட்டை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஆன்மிக மாநாட்டில் இறையாளர்கள், அருளாளர்கள், சித்தர்கள், குருமார்கள், அடியார்கள், ஆன்மிக பெரியோர்கள், தலைவர்கள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
ஸ்ரீ சம்பு மகரிஷி படத் திறப்பும், சுவாமி ஸ்ரீ ருத்ர வன்னியர் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜரிஷி அர்த்தநாரீஸ் வர்மா நூல் வெளியீட்டு விழாவும், அருளாளர்கள் ஆசியுரையும், வன்னிய குல குருமார்கள், அடியார்கள், அனைவருக்கும் திருவடி பூஜையும் நடைபெற்றது. பசுமை தாயகம் மாநில துணைசெயலாளர் ஐ.நா.கண்ணன், பாமக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், நிர்மல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|
பரந்தூர் விமானநிலைய விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்த மக்கள் | செய்திப்பிரிவு | காஞ்சிபுரம் | 2024-02-26 06:05:00 |
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ளபொடவூர் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான முதல்நிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலம் குறித்த தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.
தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்துப்பூர்வமாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். அவற்றின் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிராம மக்கள் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் நெல்வாய், நாகப்பட்டு, ஏகாம்பரம், தண்டலம், வளத்தூர், மேலேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், நாளை நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது மட்டுமில்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
|
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார் | ந. சரவணன் | திருப்பத்தூர் | 2024-02-26 06:04:00 |
திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்ட இன்று (பிப்.26) முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்ட உள்ளார். இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் நேற்று குப்பத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "ரெட்டி குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்.26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.
அதில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தடுப்பணைக்கான பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார்" என தெரிவித்துள்ளார்.
இத்தகவல் தமிழக விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிஉள்ளது. ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகப் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்குதமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘1992 பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு மீண்டும் மீறியுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளது. இதுதவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் இந்த வழக்குகள் முடிந்துவிட்டதாகப் பொய்யான ஒரு தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இனியும் தமிழக அரசு தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதற்கான ஆதாரங்களைத் திரட்டி புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் பாலாறு என்று ஒன்றுஇருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும் நிலை எதிர்காலத்தில் வரும்’’ என்றார்.
|
கோவில்பட்டியில் கடலைமிட்டாய் குறுங்குழுமம் | செய்திப்பிரிவு | தூத்துக்குடி | 2024-02-26 06:01:00 |
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் மற்றும் கோவில்பட்டியில் பனைப்பொருட்கள், கடலைமிட்டாய் குறுங்குழுமங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழாவில், தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம்:
விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் ‘வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்' அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ‘கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம்' அமைக்கப்படும்.
இந்தக் குழுமங்களுக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்றவசதி, தானியங்கி பேக்கிங்கூடங்கள் மற்றும் உற்பத்திபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் ‘வர்த்தக வசதிகள் மையம்' சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
|
தீவுத்திடல் கண்காட்சி: 42 நாளில் 4.79 லட்சம் பேர் வருகை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 05:59:00 |
சென்னை: சென்னை தீவுத்திடல் கண்காட்சிக்கு 42 நாட்களில் 4.79 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, கடந்த ஜனவரி 14-ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் சுற்றுலா கண்காட்சியில் 51 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
பொருட்காட்சியை நேற்று முன்தினம் (24-ம் தேதி) 12,793 பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த42 நாட்களில் 3,99,892 பெரியவர்கள், 79,101 சிறியவர்கள் எனமொத்தம் 4,78,993 பேர் பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
|
சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் அதிக முறை பயணம் செய்த 40 பேருக்கு பரிசு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 05:56:00 |
சென்னை: சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, மெட்ரோ ரயில்களில் அதிக முறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிச.15-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி வரை 3 மாதங்களுக்கு ஒவ்வோரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நம்ம யாத்ரியுடன் இணைந்து பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி ஜனவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை மெட்ரோ ரயில்களில் அதிக முறை பயணித்த 40 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, பயணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, பீட்ஸ் அண்ட் மெட்ரோஸ் மெகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரபல சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் ஸ்ரீநிஷா ஜெயசீலன், ஸ்ரீதர் சேனா மற்றும் பேட்சுலர்ஸ் பேன்ட் (Bachelor’s Band) ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் பெனுதர் பர்ஹி உட்பட பலர் பங்கேற்றனர்.
|
சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை திறந்தார் பிரதமர் மோடி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 05:54:00 |
சென்னை: சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனை உட்பட தமிழகத்தில் மொத்தம் ரூ.313.60 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர்மோடி திறந்து வைத்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மத்திய அரசின் நிதியில் ‘தேசியமுதியோர் நல மையம்’ (மருத்துவமனை) கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், தேவையை கருதி தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கரோனா மருத்துவமனைசெயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, காணொலி காட்சி மூலமாக,சென்னை கிண்டியில் ரூ.151.17கோடியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையம்,ஆய்வகத்தையும் திறந்து வைத்தார்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தின் கட்டிடம் மத்தியஅரசு நிதியில் கட்டப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் நிதி பங்களிப்போடுதான் மருத்துவமனை தொடங்கப்படுகிறது. 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் உட்பட 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 5 அறுவை சிகிச்சை அரங்கம், 20 கட்டண வார்டுகள் உள்ளன. கட்டண அறையில் உணவுடன் சேர்த்து ரூ.900கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள முதியவர்களும்இந்த மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மருத்துவமனை திறக்கப்படும்போதே மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் மட்டுமில்லாமல் முதுமையியல், முதியோர் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளும் இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படஉள்ளன.
பல்வேறு சிகிச்சை பிரிவுகள்: புறநோயாளிகள் பிரிவு, அறிவுத்திறன் குறைபாடு சிகிச்சை, எலும்பு தன்மையை உறுதிப்படுத்த சிகிச்சை, எலும்பு தேய்மானம் சிகிச்சை, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத முதியவர்களுக்கு சிகிச்சை,நாள்பட்ட வலி மற்றும் பிரச்சினைகளுக்கான சிகிச்சை, இதயமருத்துவம், சிறுநீரக மருத்துவம்,மூளை நரம்பியல், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம்,புனர்வாழ்வு மருத்துவம், சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவ சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் உள்ளன.
பொது அறுவை சிகிச்சை, எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் ஆகியவையும் இங்குவழங்கப்படும். இதற்காக அதிநவீன உபகரணங்களும் வரவுள்ளன.
இந்த மருத்துவமனை முதியோருக்கான பிரத்யேக மருத்துவமனையாக திகழ்ந்து, ஒரு மகத்தான சேவையை வழங்கஉள்ளது.
ரூ.313.60 கோடியில் கட்டிடங்கள்: இந்த மருத்துவமனை உட்படதமிழகத்தில் மொத்தம் ரூ.313.60கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். 60 சதவீதம்மத்திய அரசு நிதி, 40 சதவீதம்மாநில அரசு நிதியில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளரூ.125 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
|
‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டார் முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 05:51:00 |
சென்னை: ஓய்வுபெற்ற டிஜிபி வால்டர் ஐ.தேவாரம், ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். தமிழக காவல் துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர்வால்டர் ஐ.தேவாரம். பணிக் காலத்தில் சட்டம் - ஒழுங்கை கையாள்வதில் திறன் மிக்கவராக இருந்த இவர், சமூக விரோதிகள், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இதன் காரணமாகவே, காவல் துறையில் பணிக்கு சேரும் பலரும் இவரை ரோல் மாடலாக ஏற்று தங்களது வழித்தடத்தை அமைத்துக் கொண்டனர்.
பணியிலிருந்து ஓய்வுபெற்று சுமார் 26 ஆண்டுகள் ஆன நிலையில், ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதி அதை நேற்று வெளியிட்டார். அந்தபுத்தகத்தில் பல்வேறு அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. காவல்துறையில் தனது அனுபவங்களை விரிவாக எழுதியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் தான் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.
புத்தகத்தை தேவாரம் வெளியிட, அதை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் பெற்றுக்கொன்டார். சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன், ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபிக்கள் லத்திகா சரண், சைலேந்திர பாபு,தற்போதைய கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட பலர் இந்த நூலை அடுத்தடுத்து பெற்றுக்கொண்டனர். தமிழாக்கம் செய்ய உதவிய முன்னாள் போலீஸ் அதிகாரி துக்கையாண்டி விழாவில் கவுரவிக்கப்பட்டார்.
|
HinduTamil News Articles Dataset
Overview
This dataset contains news articles in Tamil language scraped from the Hindu Tamil news website. Each article includes its title, author, city, published date, and text.
Motivation
This dataset was created to provide a comprehensive collection of Tamil news articles for research and analysis purposes.
Data Sources and collection method
The data in this dataset was collected from the Hindu Tamil news website (https://www.hindutamil.in/news/tamilnadu/). Data was collected from the website using web scraping techniques.
Sending HTTP Requests: The requests library in Python was utilized to send HTTP GET requests to the Hindu Tamil news website. These requests fetched the HTML content of each webpage.
Parsing HTML Content: The BeautifulSoup library parsed the HTML content, enabling the extraction of specific elements from each webpage. This included gathering article URLs, titles, authors, published dates, and main article text.
Iterative Scraping: Data was scraped iteratively from multiple pages of the website. Each webpage typically displayed a list of articles, and the URLs for each article were extracted. Subsequently, each article URL was visited to extract detailed information.
Handling Errors and Timeouts: Error and timeout handling was implemented using try-except blocks to ensure smooth operation during the scraping process.
Data Cleaning and Preprocessing
The dataset collected from the Hindu Tamil news website underwent several cleaning and preprocessing steps to ensure it was suitable for analysis and modeling. The steps employed include:
Removing Duplicate Entries
- Duplicate entries were identified based on the 'Published' column, as articles with the same published date and time were considered duplicates.
- Duplicate rows were removed using the drop_duplicates() method from the pandas library, ensuring only unique articles remained.
Handling NaN Values
- NaN values were handled by removing rows containing NaN values depending on the context. For instance, rows with NaN values in the 'City' or 'Author' column were dropped.
- Rows with missing data in essential columns were excluded from the final dataset.
Filtering Out Irrelevant Information
- Irrelevant information such as author's comments, footer text, and advertisements were filtered out from the article text.
- Only the main content of the news article was retained.
Formatting Published Dates
- Published dates were extracted from the article content and formatted into a standardized date-time format to ensure consistency.
Process for Converting Unstructured Data to Structured Format
Unstructured data from the HTML content of the website was converted to structured format using BeautifulSoup. Relevant information such as title, author, city, published date, and text were extracted from the HTML tags and organized into a tabular format.
Dataset Structure
The dataset has the following structure:
- Title: Title of the news article
- Author: Author of the news article
- City: City mentioned in the news article
- Published: Published date and time of the news article
- Text: Main content of the news article
Sample entries
Title | Author | City | Published | Text |
---|---|---|---|---|
ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-26 17:02:00 | சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி... |
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-26 16:52:00 | சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இரண்டு துணைத்... |
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் | இரா.ஜெயப்பிரகாஷ் | காஞ்சிபுரம் | 2024-02-26 16:30:00 | காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக... |
Data Usage
Users can use this dataset for text analysis, natural language processing, and sentiment analysis of Tamil news articles.
License
This dataset is provided under the MIT License.
MIT License
Copyright (c) 2024 Shweta Sandeep Sukhtankar
Permission is hereby granted, free of charge, to any person obtaining a copy of this dataset and associated documentation files (the "Dataset"), to deal in the Dataset without restriction, including without limitation the rights to use, copy, modify, merge, publish, distribute, sublicense, and/or sell copies of the Dataset, and to permit persons to whom the Dataset is furnished to do so, subject to the following conditions:
The above copyright notice and this permission notice shall be included in all copies or substantial portions of the Dataset.
THE DATASET IS PROVIDED "AS IS", WITHOUT WARRANTY OF ANY KIND, EXPRESS OR IMPLIED, INCLUDING BUT NOT LIMITED TO THE WARRANTIES OF MERCHANTABILITY, FITNESS FOR A PARTICULAR PURPOSE AND NONINFRINGEMENT. IN NO EVENT SHALL THE AUTHORS OR COPYRIGHT HOLDERS BE LIABLE FOR ANY CLAIM, DAMAGES OR OTHER LIABILITY, WHETHER IN AN ACTION OF CONTRACT, TORT OR OTHERWISE, ARISING FROM, OUT OF OR IN CONNECTION WITH THE DATASET OR THE USE OR OTHER DEALINGS IN THE DATASET.
Citation
If you use this dataset, please cite it as: Sukhtankar, Shweta. (2024). Tamil News Articles Dataset.
- Downloads last month
- 45